search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் நகை பறிப்பு"

    • ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது.
    • தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). இவரது மனைவி தங்கமணி (47). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார்கள்.

    கிருஷ்ணசாமி, தங்கமணி ஆகியோர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு மளிகை கடையை பூட்டி விட்டு கிருஷ்ணசாமி அருகே உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டார்.

    அப்போது இரவு 10 மணியளவில் வீட்டில் அவரது மனைவி தங்கமணி மட்டும் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த ஒரு மர்மநபர் திடீரென இவர்களது வீட்டிற்குள் நுழைந்தார்.

    பின்னர் முகமூடி நபர் திடீரென தங்கமணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலியை பறிக்க முயன்றார். அப்போது அவரிடம் இருந்து நகையை காப்பாற்ற தங்கமணி போராடினார்.

    இதில் ஒரு கட்டத்தில் கழுத்தில் இருந்த கத்தி தங்கமணியின் முகத்தில் குத்தியது. இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் மர்மநபருடன் போராடுவதை விட்டு விட்டு கீழே விழுந்தார். இந்த நேரத்தில் தங்கமணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார்.

    பின்னர் தோட்டத்துக்கு சென்ற அவரது கணவர் கிருஷ்ணசாமி வீடு திரும்பினார். அப்போது மனைவி தங்கமணி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் நடந்த சம்பவங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து தங்கமணியை உடனடியாக மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர்.

    இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் பற்றி தெரிய வந்ததும் வெள்ளிதிருப்பூர் போலீசார் மற்றும் அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் துப்பறியும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

    தற்போது இந்த பகுதியில் கரும்பு, வாழைக்காய் வெட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் வெளி இடங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே தொழிலாளர்கள் போல் வந்து யாராவது நகை பறிப்பில் ஈடுபட்டார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரங்கசமுத்திரம் என்ற பகுதியில் உறவினர் வீட்டில் டியூசன் பயின்று வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் என்பவரது மனைவி பூங்கொடி(42) இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில், குழந்தைகள் இருவரும் பல்லடம் அருகே உள்ள சூலூர் கேந்திர வித்யா பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே குழந்தைகள் ஞாயிற்றுகிழமைகளில், பல்லடம் அருகே செட்டிபாளையம் ரோடு ரங்கசமுத்திரம் என்ற பகுதியில் உறவினர் வீட்டில் டியூசன் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று வழக்கம் போல குழந்தைகளை பார்த்துவிட்டு, அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்க பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டிற்கு பூங்கொடி மோட்டர் சைக்கிளில் வந்துள்ளார்.

    அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பூங்கொடி அணிந்திருந்த, 6 1/2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இது குறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • சாலிகிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக அஞ்சலி திருவான்மியூரில் இருந்து மாநகர பஸ்சில் வடபழனி வந்தார்.
    • பஸ்சில் இருந்து இறங்கியபோது அஞ்சலி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    போரூர்:

    ஈஞ்சம்பாக்கம் அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி. வீட்டு வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சாலிகிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக திருவான்மியூரில் இருந்து மாநகர பஸ்சில் (எண் 78) வடபழனி வந்தார். பஸ்சில் இருந்து இறங்கியபோது அஞ்சலி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் அஞ்சலியின் நகையை பறித்து இருப்பது தெரியவந்தது.

    • ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக செல்லக்கிளி நடந்து சென்றுகொண்டிருந்தார்.
    • செல்லக்கிளி அருகே வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்தார்.

    திருச்சி,

    திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள கருமண்டபம் அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே பகுதியில் எண்ணை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்லக்கிளி (வயது 61). இந்த தம்பதியரின் பிள்ளைகளுக்கு திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராமமூர்த்தி வழக்கம்போல் எண்ணை கடையை திறக்க சென்றுவிட்டார். இன்று வெள்ளிக்கிழமையாக இருந்தததால் வீட்டின் சற்று தூரத்தில் சக்தி நகர் பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக செல்லக்கிளி நடந்து சென்றுகொண்டிருந்தார். கோவிலுக்கு அருகிலுள்ள அருணா அவென்யூ பகுதியில் நடந்து சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் வந்துள்ளார்.

    செல்லக்கிளி அருகே வந்த அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தாலி சங்கிலியை பறித்தார். இதனை சற்றும் எதிர்பாராத செல்லக்கிளி நகையை தக்க வைக்க போராடினார். மேலும் திருடன், திருடன் என்று கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த மர்ம நபர் பறித்த நகையுடன் தப்பினார்.

    இதையடுத்து அவர் கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகியோர் நகையை பறிகொடுத்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த கொள்ளையனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த, குறிப்பாக அருகிலேயே கருமண்டபம் போலீஸ் சோதனைச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இந்த துணிகர நகை பறிப்பு சம்பவம் பட்டப்பகலில் அரங்கேறி உள்ளது. திருச்சி கருமண்டபம் பகுதி கொள்ளையர்களின் கூடாரமாக மாறிவருவதற்கு ஏற்ப கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான நகை கொள்ளை, செயின் பறிப்பு, நூதன மோசடி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில் ஐ.ஓ.பி. நகர் அருகில் ஒரு திருமண வீட்டில் பட்டப்பகலில் 100 பவுன் நகை கொள்ளை, கொரோனா தடுப்பூசி செலுத்த சென்ற மூதாட்டியை ஏமாற்றி நகை பறிப்பு, நடந்து செல்பவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் செல்போன் பறிப்பு என மக்கள் அச்சத்துடனேயே வாழ்நாளை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    பகல் மற்றும் இரவு நேரங்களிலும் போலீசார் மாறுவேடத்தில் ரோந்து பணி சென்று கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என்று கருமண்டபம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்ற போது பெண்ணிடம் பைக்கில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்துச்சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    வடமதுரை:

    மணப்பாறை அருகே கண்ணுடையான் பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 50). தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    மோர்பட்டி அருகே வந்த போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    இதில் தனலட்சுமி காயமடைந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் சமீபகாலமாக தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இருந்தாலும் இதனையும் மீறி ஒரு சில இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 பெண்களிடம் 7 பவுன் செயினை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு மீண்டும் ரோட்டில் தனியாக நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்து உள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதி 3-ல் நேற்றிரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மகள் வீட்டுக்கு தனியாக நடந்து சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் மோட்டார் சைக்கிளில் இரு வாலிபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் திடீரென அந்தப் பெண் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருடன். திருடன்.. என கத்தினார். சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் பெண்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர்.
    • 3 பவுன் தங்க நகையுடன் தப்பி சென்றனர்

    கோவை,

    கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 29). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் விளாங்குறிஞ்சி-சரவணம்பட்டி ரோட்டில் சென்றார்.

    அப்போது விளாங்குறிஞ்சி அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென விஜயலட்சுமியின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனால் அவர் நிலை தடுமாறி மொபட்டில் இருந்து கிழே விழுந்தார்.இதனைகண்டு அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் அவர்கள் 3 பவுன் தங்க நகையுடன் ேமாட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் பலத்த காயம் அடைந்த விஜயலட்சுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இது குறித்து விஜயலட்சுமி கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    • 3 பவுன் தங்க நகையுடன் தப்பி சென்றனர்
    • போலீசார் மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை கே.கே.புதூர் என்.ஆர்.ஜி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 42). இவர் நேற்று தனது குடும்பத்தினர் சிலருடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாயிபாபா காலனி பழனியப்பா வீதி அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென சரஸ்வதியின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி சத்தம் போட்டார். அவரின் சத்தத்அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவருடன் சென்றவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அதற்குள் அவர்கள் 3 பவுன் தங்க நகையுடன் ேமாட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து சரஸ்வதி சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பி சென்ற மோட்டார் சைக்கிள் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    மடிப்பாக்கத்தில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மனைவி மஞ்சுளா (50). இன்று காலை அருகே உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்.

    இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    பெருங்குடியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை மாவட்டம், பெருங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவன், நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சந்திர போசின் மனைவி அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

    விழித்து பார்த்த சந்திரபோஸ் மற்றும் குடும்பத்தினர் விரட்டிச் சென்றபோது மர்ம நபர் தப்பிச் சென்று விட்டான். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இது குறித்து பெருங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகிறார்.
    ஈரோடு அருகே ஓடும் ரெயிலில் சென்னை பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    சென்னை திருவேல்லிகேனி பகுதியை சேர்ந்தவர் முகமது சாகிர் பாஷா(42). இவரது மனைவி காதர்பீவி(40). கணவன்-மனைவி இருவரும் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக சுவேதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணித்தனர்.

    நள்ளிரவில் காதர்பீவி ஜன்னல் ஓரமாக தூங்கி கொண்டிருந்தார். ரெயில் ஈரோடு ஜங்‌ஷன் அருகே வந்தபோது, மர்மநபர் ஒருவர் வெளியே நின்று கொண்டு காதர்பீவி கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்றான்.

    இதில் உஷார் ஆன அவர், செயினை இருக்கமாக பிடித்து கொண்டதால் பாதி செயினை மட்டும் அறுந்து மர்மநபரிடம் சிக்கியது. இதில் 4 பவுன் செயினில், 2 பவுன் மட்டுமே தப்பியது.

    இதுகுறித்து முகமது சாகீர் பாஷா இமெயில் மூலம் நேற்று ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.
    சோழவந்தான் அருகே வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழவந்தான்:

    சோழவந்தான் அருகே உள்ள ஊத்துக்குளி கிராமத்தைச்சேர்ந்தவர் தமிழன் (வயது35), லாரி டிரைவர். இவரது மனைவி நந்தினி (24).

    நேற்று இரவு இவர்கள் வழக்கம்போல் வீட்டில் தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் நைசாக புகுந்தார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நந்தினி கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினான்.

    காலையில் எழுந்த நந்தினி நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து காடுபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து வீட்டுக்கு புகுந்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    ×